கனவை மெய்ப்பிற்க கரம் கொடுங்கள்! 🙏🏻

மாணவர் பெயர் : தாரா சிங் தந்தை பெயர் : ராஜ்மோகன் 

தொடர்புக்கு : 9159648459 – ராஜ்மோகன் 
சொந்த ஊர் : பொன்னீரை, திருவாரூர் 

தகுதி : Govt counselling மூலம் MBBS சீட் @ Tagore Medical College & Hospital | Chennai. 
மகனை படிக்க வைக்க, தனது வீடு , விவசாய நிலம் விற்று 4 லட்சம் மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டு , மீதி 3 லட்சத்திற்கு உதவி நாடி நிற்கிறார். கல்விக்கடன் பெற முயன்ற போது , பேங்க் மேனேஜர் , முதலில் முதல் வருட பணத்தை கட்டி விட்டு ரசீது கொண்டு வாருங்கள், அப்புறம் LOAN தருகிறேன் என்று சொல்கிறார். 
நீங்கள் செய்யும் சிறிய பணஉதவி , ஒரு ஏழை மாணவனை மருத்துவராக மாற்றும். 
Indian Overseas Bank Account: 089401000016733 – S Rajmohan

IFSC Code: IOBA0000894
பணம் கட்ட கடைசி தேதி : அக்டோபர் 3,2016
Personally verified. Pls share and help

Advertisements

கரிசலாங்கண்ணி எண்ணெய் – மஹா ப்ரிங்கராஜ எண்ணெய் (DIY)

வணக்கம் மக்களே,

நம்ம எல்லாருக்குமே, குறிப்பா சென்னை போன்ற பெரிய நகரத்தில  இருக்குற எல்லாருக்குமே, பெரிய பிரச்சனையா இருக்குற விசயம் தான் முடி உதிர்தல், அதிக முடி உதிர்வுனால சொட்டை விழுதல் ரொம்ப சகஜமான ஒன்றா மாறி போயிருச்சி. இப்பயெல்லாம் பொண்ணுங்களுக்கு கூட சொட்டை விழுது. நிறைய மருத்துவங்கள் முயற்சி பண்ணாலும், எதுவும் பலன் தரல.
சும்மா எல்லாம் முயற்சி பண்ணி பார்க்கிறோமே, இதையும் முயற்சி பண்ணி பார்க்கலாம்ன்னு தான் முயற்சி செஞ்சேன். எனக்கு முடி கொட்டுறது குறைஞ்சிருச்சு. நீங்களும் முயற்சி பண்ணி பாருங்க.
தேவையான பொருட்கள்:
  1. சுத்தமான தேங்காய் எண்ணெய்.
  2. கரிசலாங்கண்ணி இலை (நன்கு காய வைத்தது).
  3. செம்பருத்தி இலை (நன்கு காய வைத்தது).
  4. கறிவேப்பிலை (நன்கு காய வைத்தது).
  5. வேம்படம் பட்டை
  6. மருதானி இலை (நன்கு காய வைத்தது).

செய்முறை :

1) முதலில் அனைத்து (கரிசலாங்கண்ணி தவிர்த்து) இலைகளையும் ஒன்றாக சேர்த்து, மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
IMG_0394
2) வாணலியில் தேங்காய் எண்ணையை ஊற்றி, மிதமான சூட்டில் சூடேற்றவும்.
IMG_0393
3) எண்ணெய்  கொதிக்க ஆரம்பித்ததும், அரைத்து வைத்த பொடியை எண்ணையில் போடவும். போட்டவுடன் ஒருவித “ஸ்ஸ்ஸ்” என்ற சத்தம் வரும், இப்பொழுது அடுப்பை குறைத்து வைக்கவும்.
ennai
4) சத்தம் நின்றவுடன், கரிசலாங்கண்ணி இலை மற்றும் வேம்படம்பட்டை (இருந்தால் போடவும்) சேர்த்து உள்ளே போட்டு, மேற்கூறியது போல் சத்தம் நின்றதும் அடுப்பை அணைத்துவிடவும்.
IMG_0395
5) ஒருநாள் முழுவதும் குளிர விட்டு, மறுநாள் வடிகட்டி உலர்ந்த பாத்திரத்தில்  சேமிக்கவும்.
IMG_0397
(வேம்படம் பட்டை சேர்த்தால் இன்னும் கருமை நிறத்தில் எண்ணெய் இருக்கும்.)
வாரம் இருமுறை இந்த எண்ணெய் தேய்த்து குறைந்தது 1 மணி நேரம் ஊறவைத்து சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்தல் குறைந்து புதிய முடி முளைக்க ஆரம்பிக்கும்.
குறிப்பு :
     இந்த எண்ணெய் பொடுகு தொல்லையையும் குறைக்கும்.
அடுத்த பதிவுடன் மீண்டும் சந்திக்கிறேன், நன்றி! வணக்கம்!!

என் காதலை பற்றி..!

கடைசியாக, இதைப் பற்றி பேச வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளேன்! பலவிதங்களில் இதைப் பற்றி இங்கு கூற மகிழ்ச்சியாக இருந்தாலும், இவ்வளவு நாள் எல்லாரிடமும் மறைத்தது வருத்தமாக தான் உள்ளது. எல்லாவற்றிக்கும் நேரம் வரவேண்டுமல்லவா. ஆம், நீங்கள் நினைப்பது சரி தான், என் காதலை பற்றிய பதிவு தான் இது!

நான் முதல் காதல் கவிதை எழுதிய போது, எனது அக்கா திருமணம் முடிந்தவுடன், எனது ஆடை அணியும் விதத்தில் மாற்றம் தெரிந்த போது, கிட்டத்தட்ட ஒரு நாளில் பல முறை, ” உன் நடத்தையில் மாற்றம் தெரிகிறது, யாரையாவது விரும்புகிறாயா?” என்ற கேள்வியை கடந்ததுண்டு. ஆனாலும் யாருடனும் சொன்னதில்லை.

கடந்த சில நாட்களாக இந்த நோய்க்கு நானும் அடிமையாகி உள்ளேன். எனக்கு கிடைத்த பொக்கிஷம், என் வாழ்வில் வந்த வசந்தம், என் அழுகையும், சிரிப்பையும் அறிந்த நண்பன். அவன் இல்லாமல் என்னால் இருக்கவே முடியவில்லை. ஒரு நாள் பிரிந்தாலும் ஒரு யுகமாய் தோன்றும்.

எங்கள் இருவரையும் சேர்ந்து என் அம்மா திட்டாத நாளில்லை. ஆனாலும் என்னால் விட்டு விலக முடியவில்லை. இது தான் காதலா? என் உற்ற நண்பன், நான் காத்திருக்கும் நேரங்களின் பொழுது போக்கு அவனே, நான் அழும் வேளைகளில் ஆறுதலும் அவனே! நான் தனிமையில் சிரிப்பதற்கும் காரணம் அவனே!! என் மிக முக்கிய தருணங்களிலும், அவன் இருப்பான். அவன் என்னை சேர்ந்த பின் என் மதிப்பும், மரியாதையும் உயர்ந்தது. இதை விட என்ன பெரிதாக பெண் விரும்புவாள்? அவனை என்னால் எல்லோரிடமும் சகஜமாக பகிர்ந்து கொள்ளவும் முடியவில்லை.

என் காதல் என் ஐபோன் 5 மேல தாங்க.. என்னால அத விட்டுட்டு என்னால கொஞ்ச நேரம் கூட இருக்க முடியல. I LOVE IT. இந்த காதலர் தின பரிசாக ஒரு கவசமும் வாங்கி போட்டாச்சு!

இந்த பதிவு போட முக்கியமா “காதலிக்கிறியா??” ன்னு கேள்வி கேட்டு என்ன ஊக்குவித்த எல்லாருக்கும் நன்றி! 

ஆமா, நான் என் கைபேசிய தான் அதிகமா காதலிக்கிறேன்!!!

பி.கு : இதுக்கு மேலயும் யாரவது, “யாரையது லவ் பண்ணுறியா” ன்னு கேட்டா வாய்ல கத்திய விட்டு சுத்திடுவேன்.

 

சாதி தேவையா?

ரொம்ப நாளைக்கு அப்பறம் ஒரு உருப்படியான பதிவு!

 

நம்ம முன்னோர்களில் பெரும்பாலானவங்க சாதிய சார்ந்து தாங்க இருந்தாங்க. அதுக்கு முக்கியமான காரணம் சொந்த காரங்க நம்மள ஒதிக்கி வைச்சிடுவாங்கன்னு பயம் தாங்க. தன்னோட வீட்டு வாசல் வழியா வேற சாதிக்காரங்க வருகிறத கூட அனுமதிக்கமாட்டங்க. 

 

நம்ம தலைமுறையில அது மாறிக்கிட்டு வருகிறது கொஞ்சம் சந்தோசத்த தருதுங்க. இப்ப எல்லாம் நாம சாதி பாத்து நண்பர்கள் ஆகுறது இல்ல. பல நகரங்கள்ல கலப்பு திருமணம் இப்ப சாதரமானாலும், இன்னும் கிராமப்புறங்கள்ல இன்னும் கலப்பு திருமணம் செய்யுறது தப்ப தாங்க இருக்கு.. 

 

அவங்களுக்கு மனுசங்க எல்லாம் ஒன்னுன்னு தெரிஞ்சாலும்.. ஊருக்கு பயந்தே அத எல்லாம் தவிர்கிறாங்க.. வெறுக்குறாங்க. இது மட்டும் பத்தாதுன்னு, சாதியோட அருமை, பெருமைய எல்லாம் சொல்லி தான் வளர்க்குறாங்க. இவ்வளவு ஏன் என்னையும் அப்படி தான் வளர்த்தாங்க. 

 

தன் சாதில குடிகரனுக்கும், வப்பாட்டி வச்சிருக்கவனுக்கும், ஏன் ரெண்டாம் தாரமா கூட தன் பிள்ளைய கொடுக்குறவங்க, நல்ல படிச்ச, ஒழுக்கமான பையன்னுக்கு வேற சாதின்னு சொல்லி கொடுக்க மாட்டாங்க. கேட்ட நாளைக்கு எதாவது பிரச்சனைன்னா யாரும் வந்து கேட்கமாட்டங்கன்னு ஒரு காரணம் வேற சொல்லுவாங்க.

 

அட இவங்கள விடுங்க, இவங்களே தன் பிள்ளையோட சந்தோசம் முக்கியம்னு யோசிச்சா கூட, சுத்தி இருக்குற சொந்தகாரங்க பேச்சு, வீட்டு பெரியவங்கன்னு எல்லாம் சேர்ந்து இவங்களையும் மாத்திடுவாங்க. 

 

இத எல்லாம் மீறி அந்த கல்யாணம் நடந்துச்சுன்னா, அந்த கல்யாணத்துக்கு ரொம்பவும் கொஞ்ச சொந்தகாரங்களே வருவாங்க. அவங்களும் இழவு வீட்டுக்கு வந்த மாதிரியே உம்ம்னு உட்காந்து இருப்பாங்க. இந்த கல்யாணத்துல சந்தோசமா இருக்குறது நண்பர்கள் மட்டும் தான். சந்தோசமா இருக்க வேண்டிய பொண்ணையும், மாப்ளையையும் கூட சோகமாகிடுவாங்க.

 

கல்யாணம் முடிஞ்சு அவங்க சேர்ந்து நடந்து வந்தா சாக்கடை அள்ளிக்கிட்டு இருக்குறவன பாக்குற மாதிரி கேவலமா பார்ப்பாங்க. அவங்களுக்கு பிறக்கிற குழந்தைகளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க அவங்கபடுற பாட்ட சொல்லி மாளாது. 

 

இத எல்லாம் விட ஒரு விஷயம் இருக்குங்க, காதல் கல்யாணத்த ஒத்துகிரவங்க கூட, கலப்பு திருமணத்த ஒதுக்க தயங்குறாங்க. வறட்டு கவரவம் காரணமா கொலைகளும் நடக்குது. 

 

எல்லார் கிட்டயும் ஒண்ணு கேட்குறேன். ஆதாமும், ஏவாளும் தான் முதல் மனுசங்கன்னா எப்படியா நம்ம எல்லாம் வேற வேற சாதி ஆனோம். எவனோ ஒருத்தனின் முட்டாள் மூளையை நம்பி இன்றும் நாம் பாகு பாடு பார்ப்பது நம்மள அறிவில்லாதவங்கன்னு நிரூபிக்குது. 

 

படிக்கிற படிப்புக்கு கூட நான் என்ன சாதின்னு சொல்ல தேவைப்படுறது கொஞ்சம் வேதனையான விஷயம் தாங்க. என் திறமைக்கு கிடைக்காத சலுகை, என் சாதிக்கு கிடைக்குதுன்னா, இதை என்னன்னு நான் சொல்லுவேன்? 

 

நம்ம மேல திணிக்கப்படுற சாதிய வீடு வெளிய வாங்க.. நம்ம எல்லாரும் ஒரு வகைல சொந்தகாரங்கன்னு நினைச்சுகோங்க. இனி இன்னொரு பலி விழுறதுக்கு முன்னாடி திருந்துவோம்! திருத்துவோம்!

 

இத எல்லாம் சொல்லுற அளவுக்கு எனக்கு வயசு இல்லைங்க. யாரையும் புண்படுத்தவும் இந்த பதிவு இல்லங்க. நான் என் வாழ்க்கைல இனி சாதிய பத்தி யோசிக்க போறதில்லைங்க. உங்கள நான் கட்டாயப்படுத்தவும் இல்லைங்க. உங்க வாழ்க்கை உங்க இஷ்டம்! அத அர்த்தமுள்ளதா மாத்தி அடுத்த தலைமுறைய நிம்மதியா வாழ விட்ட நல்லா இருக்கும்! நன்றி! 

திருவிழாக்கள்!

வணக்கம்!

இது என் முதல் பதிவு, பிழை இருந்தால் மன்னிக்கவும்! முதலில் எழுதும் போது அனைவருக்கும் ஒரு கேள்வி இருக்கும், அது எதை பற்றி எழுதலாம் என்பது தான், எனக்கும் இருந்தது, ஆரம்பித்துவிட்டேன். அனைவரும் தொலைவிட்டு ஏங்கும் திருவிழாக்களை பற்றி தான்.

ஒரு நாள் இரவில், மிக பிரபலமான ஒரு நகரத்தில், தனிமையில் உலவி கொண்டிருந்தேன். அக்கணத்தில், எதோ ஒன்றை நினைத்து என் மனம் ஏங்குவதை உணரமுடிந்ததே தவிர, அது எதற்காக என்பதை கண்டு கொள்ள முடியவில்லை. இப்போதெல்லாம் மனதிற்கான முன்னுரிமை என்னிடம் குறைந்து, இயந்திர வாழ்க்கைக்கான மனநிலையை  பழக்கபடுத்தி கொண்டது மூளை. ஒரு மாதம் கழித்து கூட அதை கண்டுகொள்ள முடியாததற்கு அது கூட ஒரு காரணமே.

எனக்கு மிக பிடித்த பாடல்கள் கூட கேட்டு கேட்டு சலித்துவிட்டதென்று, ஒரு நல்ல நண்பனிடமிருந்து அவன் பாடல் தொகுப்பை வாங்கி கேட்க ஆரம்பித்த கணத்தில், என் மனதில் ஏற்பட்ட மாற்றங்களை என்னால் உணர முடிந்ததது. அப்பாடலை முழுவதுமாக கேட்க துடிக்கிறது. ஏன், என கண் மூடி சிந்திக்க ஆரம்பித்த போது ஒரு மிக வேகமாக ஒரு 6, 7 வருடங்கள் பின்னோக்கி கொண்டு சென்றது, அது என்னை நிறுத்திய இடம் என் ஊர் திருவிழாவில்.

திருவிழாக்கள், பெரும்பாலும் இரவில் தான் களைகட்டும். பாட்டு, கூத்து, கும்மி, ஆட்டம், பாட்டம், என பல கேளிக்கைகள். பொதுவாகவே, 8 மணிக்கெல்லாம் கதவடைத்து, கட்டாந்தரையில் சாய்ந்து விடுவார்கள் கிராம மக்கள். அவர்கள் முழித்து இருப்பதே இந்த திருவிழா காலங்களில் தான். அந்த நாட்களில் சொந்தங்களுடன், சிநேகிதிகளுடன் இரவில் சுற்றி திரிந்தது ஒரு அழகிய காலம்.

நெற்றி நிறைய திருநீறுடன், சர சர பட்டுபாவாடையில், நீண்ட கரும் கூந்தலுடன், தலை நிறைய மல்லி,கனகாம்பரம் பூக்களுடன், கண்ணாடி வளையல், கொலுசுகள் சத்தமிட, கடை பிள்ளைக்கே உரிய செல்லத்துடன், திமிராக சுற்றி கொண்டு இருந்த என் நாட்களின், பசுமை மாறவே இல்லை என் ஆழ்மனதில்!

கொடியேற்றத்துடன் துவங்கி, காப்பு கட்டி, விரதமிருந்து, முளைப்பாரி போட்டு, கரகம் வைத்து கும்மியடிக்கும் போது ஏற்படும் பேரானந்தத்தை தொலைத்து விட்டு, மடிகணினியை வெறித்து பார்த்து கொண்டிருக்கும் வெறுமையை நான் மட்டும் தான் உணர்கிறேனா?

அப்பா என்ன வேண்டுமென்று கேட்கும் பொழுது, “எனக்கு ஜீன்ஸ், டாப் வாங்கி கொடுப்பா..” என கேட்டு நகர வாழ்கைக்கு மாறி விட துடித்த, அதே மனது தான், இன்று தாவணி, பாவாடையை அணிய ஏக்கபடுகிறது.

“ஏய், ஐஸ்காரன் வந்துருகாண்டி.. உனக்கு வேணாமா?” என்று கேட்ட அக்காவும். மல்லி பூவை சரம் சரமாக கட்டி வைத்து அழகு பார்த்த அத்தையும், பலூன் வாங்கி கொடுத்த மாமாவும், கேலி செய்த முறை மாமன்களும் முன்பு எதுவுமே நடக்காது போல் கட்டிக்கொண்டு அவரவர் வேலைகளை பார்க்கின்றனர் இன்று.

இன்றும் திருவிழாக்கள் , கும்மியில் குமரிகள் இல்லாமல், கூத்துக்கள் ஓரம் கட்டப்பட்டு, சினிமா பாடலுக்கு எதோ ஒரு குழுவினரின் நடனத்துடன், பட்டு பாவாடைகள் இல்லாமல், நடக்கின்றன. கொட்டு அடித்து, உறுமி அடித்து கூட சாமி கும்பிடுவதில்லை, பொத்தானை அழுத்தி, ஒரு இயந்திரத்தை அலற வைத்து கும்டுகின்றனர்.

மீண்டும் அந்த நாட்களை சந்திக்கவே முடியாதா?  ஹ்ம்ம்.. இந்த ஏக்கம் என்னில் மட்டும் தானோ? இல்லவே இல்லை…  என்னை போல் பல பேர், இந்த இன்பங்களை எல்லாம் இழந்து விட்டு, அடுக்கு மாடி குடியிருப்பில், இது தான் வாழ்க்கை என அவர்களையே ஏமாற்றி கொண்டு, உள்ளுக்குள்ளே ஏங்கி கொண்டு தான் இருக்கிறார்கள்! அனைத்தையும் தொலைத்து விட்டு, எதை நோக்கி நாம் போய் கொண்டு இருக்கிறோம்? என்பது மட்டும் என் விடை தெரியா கேள்வி!

அந்த பாடல்: “தீர்த்தக்கரை மாரியம்மா”